History

IMG_1813

உதாரணமாக http://karava.org/religious/the_pattini_cult,  எனும் இணையத்தளத்தைப் பார்த்தோமானால் அங்கு கஜபாகுவை “கரவ இன மன்னன்” என்றும், கஜபாகு I மன்னனை 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கஜபாகு II மன்னன் எனப் பிழையாக அடையாளப்படுத்தியதால் “வரலாற்றாசிரியர்கள் வேறு உள்  நோக்குடன் செயற்படுகிறார்கள்” எனக்  குறை கூறப்பட்டுள்ளது. 12 ஆம் நூற்றாண்டு என்பதனை  சிலப்பதிகாரம்(1984:363) இயற்றப்பட்டதுடன் தொடர்புபடுத்தி  “உணர்வதற்கு மிகவும் பிந்திய காலம்” என ஒபயசேகர குறிப்பிடுகிறார். ராஜவாளியவில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் சிலப்பதிகாரத்தை காரணமாக காட்டுகின்றன. வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறின் இந்த இணையத்தளமானது ஒபயசேகரவின் ஆய்விற்கு தீனி வழங்குவதாக, கரவ இனத்தவர் (கேரளாவிலிருந்து  வந்தவர்கள்) தற்போதும் தமது பரம்பரைப் பெயர்களாக பத்தினி ஹென்னடிகே என்பதனையும், சில மூத்த பரம்பரை வழி வந்த கரவ வீடுகள் பத்தினி வீடுகள் எனவும் அழைக்கப்படுவதனையும் எடுத்துக்காட்டுகின்றது.

காப்பியங்களான மணிமேகலை,சிலப்பதிகாரம் என்பவற்றைத் தழுவி புகழ்பெற்ற நடன அமைப்பாளரான அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் அவர்களால் அக்டோபர் 2013 இல் நடாத்தப்பட்ட மேகலா எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கான குறிப்பானது, “கஜபாகுII மன்னனால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தினி வழிபாட்டு மரபானது புராணக்கதையாக இருக்க முடியாது” எனத் திடமாக குறிப்பிடுகின்றது.

பாலசுகுமார்(2009), சிங்களபௌத்தர்களின் பத்தினி வழிபாட்டின் பிறப்பிடம் பற்றி விளக்கும் போது, ராஜவாளியக் கதையை வலியுறுத்திக் கூறினாலும், தமிழ் இந்துக்களிடையே காணப்படும் பக்திக்கு வேறு கருத்தை முன்வைக்கிறார். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளார்  சிலப்பதிகாரத்தை எழுதியபோது, தமிழர்களிடையே கூறப்பட்டு வந்த பழைய கதைகளையும்  அதனுள் புகுத்தினார் என அவர் கூறுகிறார். இதைப்போன்ற வாதத்தையே  சற்குணம் 1976 முன்வைக்கிறார்) இக் கால கட்டத்திலே இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததென்றும், புவியியல் ரீதியாக அது பிரிந்த போது கண்ணகியின் கதையும், அவள்மேல் கொண்ட பக்தியும் இலங்கையில் நிலைத்தன எனவும் கூறப்படுகிறது. செனிவிரட்ன (2003) மாத்திரமே ஒபயசேகரவினால் எழுப்பப்பட்ட சில சந்தேகங்களுக்கு விடைகாணும் முகமாகத், தென் இந்தியாவிலே  கிராமிய கலாசாரத்திலிருந்து பிறந்த; இடைக்காலத்தில் சிங்கள தமிழ் கலாசாரத்தின் கலப்பினைக் காட்டும்  பன்டிஸ் கொள்முற போன்ற  சிங்கள உரைநூல்களை குறிப்பிடுகின்றார்.

ஆயினும் கண்ணகி/பத்தினி பக்தியானது  நூற்றாண்டு காலமாக ஓரளவு தாழ்வு உற்றாலும், இலங்கையின் கிழக்கில் தொடர்ந்தும் செழித்தோங்கி, அதைவிட சிறிது குறைவாக வடக்கு, வடமேற்கு, வடமத்திய, மத்திய, ஊவா, சபரகமுவ, மேல் மாகாணங்களில் வளர்ந்தும் வந்துள்ளமை மறுக்கமுடியாத விடயமாக உள்ளது. போர்த்துக்கேய, ஒல்லாந்த குடியேற்றவாதிகளால்  சூறையாடப்பட்டும், எரிக்கப்பட்டும், பல பக்தர்கள் தண்டிக்கப்பட்டும்  அல்லது பல்வேறு பிரிவினைச் சார்ந்த கிறீத்தவ சபையினரால் அவர்கள் மதம் மாற்றப்பட்டாலும் அவளது கோயில்களும் தேவாலேக்களும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

நாம் சந்தித்த பௌத்த, இந்து பக்தர்கள் மடுவில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயமான புனித மேரியின் ஆலயம் கூட  ஆரம்பத்தில் கண்ணகி-பத்தினி கோயிலாக  இருந்ததெனக் கூறுகின்றனர். இந்த நம்பிக்கையை ரகுபதி (1987)உறுதிப்படுத்துகிறார் என்பதுடன், பிரித்தானிய அரச சேவை அலுவலகரான ஆர். w. ஐவரின் வடமத்திய மாகாணக் கையேடும் (1899) இதனை உறுதிப்படுத்துகிறது. “தற்போதைய காலத்தில் தினசரி காணிக்கைகள் மடுவில் உள்ள புனித மேரி ஆலயத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு அடிக்கடி கூடும் பௌத்தர்களும் அதிகளவான தமிழ் யாத்திரிகர்களும் பத்தினி அம்மாவின் கோயில் (அம்மன் கோயில்) என்றே அதனைக் கருதுகின்றனர்”என மேற்படி நூலில் கூறப்படுகிறது. பௌத்தர்களை நேர்காணல் செய்த ஒபயசேகர “ மடு ஆலயத்திற்கு திருவிழாக் காலங்களில் வருகை தருவோர், தாம் பத்தினி தெய்வத்தினை வணங்குவதாகவே சாதாரணமாக நம்புகின்றனர்” எனக் குறிப்பிடுகின்றார்(1984: 480). கொழும்பில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயமும் ஆரம்பத்தில் பத்தினியின் கோயிலாகவே இருந்ததென பக்தர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.(அதே நூலில்)

அத்துடன் http://karava.org/religious/the_pattini_cult பின்வரும் கருத்தினை முன்வைக்கிறது:

போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் கோட்டை இராச்சியத்தின் மேற்கு கரையோரப் பகுதிகளில் இருந்த பத்தினி கோயில்கள் புனித ஆன் தேவாலயங்களாகவும் மாரியம்மன் கோயில்கள் புனித மேரி தேவாலயங்களாகவும் மாற்றப்பட்டன. போர்த்துக்கேயர் காலத்தில் வத்தளை, போலவளன நீர்கொழும்பு, பாலங்கத்துறை, தலவில ஆகிய இடங்களில்  புனித ஆன் தேவாலயங்கள் இருந்து வந்துள்ளன. நீர்கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள  கொச்சிக்கடை புனித ஆன் தேவாலயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்  கருதப்படுகிறது. ஏனெனில் அது பத்தினி  தெய்வத்தின்  துணையான பாலங்கா எனப்படுபவளிற்கு மரியாதை செலுத்துமுகமாக பெயரிடப்பட்ட  துறைமுகமான பாலங்கத்துறையில் அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *