_MG_9351

வரலாறு

சமஸ்கிருதத்தில் ‘ நம்பிக்கைக்குரிய,கற்புடைய மனைவி’ எனப் பொருள்படும் பத்தினியானவள், கண்ணகி/கண்ணகை அம்மன் என்றும்அழைக்கப்படுகிறாள்; தென் இந்திய காப்பியமான சிலப்பதிகாரத்தின்  (சிலம்பின் கதை)  முக்கிய  கதாபாத்திரமான இந்த தைரியமுடைய தாய், இலங்கைவாழ் இந்துக்களால், பிரதானமாக இந்த தீவின் கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் வாழ்பவர்களால் அவளது மூல உருவில் வழிபடப்பட்டு வருகிறாள். இப் பகுதிகளில்  வாழும் பக்தர்கள் அரசியின் சிலம்பினைக் களவெடுத்தான் என வீண் பழி சுமத்தப்பட்டு; தன் கணவன் கொலை செயப்பட்டதற்கு பழிவாங்கும் முறையில் மதுரையை அழித்த பின்; தனது கோபத்தைத்  தணிக்க  அவள் இலங்கைக்கு கடல் கடந்து வந்து, இலங்கையின் வட பகுதியில் இரண்டு இடங்களுக்கும், கிழக்கில் ஏழு இடங்களுக்கும் வருகைதந்தாள் என நம்புகின்றனர். இவ் இடங்கள் அனைத்திலும் கண்ணகி அம்மனுக்கு கோயில்கள் அமைந்துள்ளன. (http://www.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2010/10/12/fea09.asp    ஐயும் பார்க்கவும்)

கண்ணகி   வடக்கு,கிழக்குப் பகுதிகளில் வருகைதந்ததாக   குறிப்பிடப்படும் இடங்களைப் பற்றி பல கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் உள்ளன என்பது  ஆச்சரியப்படத்தக்க விடயமன்று. கண்ணகியானவள் முதலில் இலங்கை மண்ணில் ஜம்புகோளபட்டினத்தில் ( தற்போது சாம்பில்துறை) காலடி எடுத்து வைத்து  சுதுமலையிலும் (இங்குள்ள  கண்ணகி கோவில் புவனேஸ்வரி அம்மன் கோவில் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது)மட்டுவிலிலும் (இவ்விடம் பெயர் பெற்ற பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோவிலைக் கொண்டுள்ளது) இளைப்பாறிய பின் கிழக்கு நோக்கிச் சென்றதாக வடக்கில் உள்ள சில பக்தர்கள் கருதுகின்றனர். வேறு சிலரோ கோவலனால் இரண்டாம் தடவையாக  ஏமாற்றப்பட்ட கண்ணகி (அவனது வெட்டப்பட்ட உடலை ஒன்று சேர்த்து தைத்து உயிர்பித்த பின் அவன் மாதவியின் பெயரையே மீண்டும் உச்சரிக்க) மனமுடைந்து ஐந்து தலை நாகமாக மாறி இலங்கையில் புகலிடம் கோரி நின்றாள் எனவும்  அதன்படி அவள் முதலில் நயினாதீவினை அடைந்து அங்கிருந்து சீரணி, அங்கணம் கடவை,அளவெட்டி சுருவில் வழியே சென்றாள்(இந்த வழியெங்கும் நாக தெய்வங்களுக்கு கோயில் அமைந்திருப்பது  ஆச்சரியமே)எனவும் நம்புகின்றனர். இன்னொரு பக்தர் கூட்டம்  கண்ணகி முதலில் நயினாதீவிற்கு நாகத்தின் வடிவில் வந்ததாக  ஏற்றுக்கொண்டாலும் அதன் பின் கோப்பாய். மட்டுவில், வெள்ளம்பிறை, கச்சாய், நாகர்கோயில், புளியம்பொக்கணை வழியாக  வற்றாப்பளையை அடைந்தாள் எனவும் கூறுகின்றனர்.

கிழக்கில்  வாழும் சில பக்தர்கள் அவள் இலங்கை மண்ணில் வந்தாறுமூலையில், அதாவது ‘ வந்து இறங்கிய இடம்’ எனப் பொருள் படும்  இடத்தில் காலடி வைத்து; மக்கள் வாழும் இடங்களின் மத்தியில்  உள்ள தலங்கள் அதிக ஆரவாரம் மிக்கதாக  இருப்பதைக் கண்ணுற்று; இறுதியாக கோராவெளி (கிரான்) எனும் இடத்தில் உள்ள காட்டில் குடிகொண்டாள் என கருதுகின்றனர். ஆயினும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அதிகளவு பக்தர்களும், சமயச் சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் அவள் பத்தாவதாக வருகைதந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளையே என்பதனை ஒருமித்து ஏற்றுக்கொள்கின்றனர்.  இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டுவதாக பத்திப்பளை: பத்தாம் – பத்தாவது என்றும்; பளை – இளைப்பாறும் இடம் என்றும்;  வற்றாப்பளை என்பது பத்திப்பளை என்ற மூலப் பெயரின் திரிபு எனும் வாதத்தை முன்வைக்கின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *