கொம்பு விளையாட்டு
கொம்பு இழுத்தல், அன் அடீம(சிங்களம்) அல்லது கொம்பு விளையாட்டு – அன் கேலிய என சிங்களத்திலும் கொம்பு விளையாட்டு எனத் தமிழிலும் வழங்கப்படுவது – பத்தினி-கண்ணகியை போற்றி விளையாடும் சடங்கு முறை விளையாட்டாகும். இது பத்தினி-கண்ணகியின் வாழ்க்கையில் இடம்பெற்ற விளையாட்டுக் காலமாகும். அவளும், அவள் கணவனான பாலங்கா/ கோவலனும் ஓர் செண்பகப்பூவினை (Michelia champaca) இரு கவைக்கோல் கொண்டு கொழுவி இழுத்தனர். அதன் போது இரு கவைக்கோல்களும் ஒன்றுடன் ஒன்று கொழுவிக் கொள்ள அங்கே ஒரு இழுவைப் போட்டி ஏற்பட்டது. இதில் பத்தினி-கண்ணகி வெற்றி பெற்று மிக்க மகிழ்வடைந்தாள். அவளும் அவள் தோழிகளும் பாலங்கா/கோவலனை எரிச்சலூட்டும் வண்ணம் கைதட்டி ஆடி கேலி செய்தனர்.
இந்தக் கதையோ அன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் சில இந்து பக்தர்கள் பகிரும் கதையோ சிலப்பதிகாரத்தில் கூறப்படவில்லை.”மதுரை மாநகரை எரித்த பின், கண்ணகி தன்னை அமைதிப்படுத்திக்கொள்ள ஒரு நதியோரம் அமர்ந்தாள். அங்கே அவள் ஆயர் சிறுவர் கூட்டம் ( கிருஷ்ணர் அவர்கள் மத்தியில் இருந்தார்) இரு கவைக் கோல்களுடன் விளையாடுவதைக் கண்ணுற்றாள். வெற்றியடைந்த குழு மகிழ்ச்சியில் ஆடிப்பாடுவதைக் கண்ட கண்ணகியின் கோபம் மெல்ல மெல்லத் தணிந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை – செப்டம்பர் வரையிலான வெப்பமும்,வரட்சியுமான காலத்தில் அம்மனை குளிர்ச்சியடையச் செய்ய கொம்பு விளையாட்டு நடைபெற்று வருகிறது”.
அன் கேலிய, கொம்பு விளையாட்டு ஆகிய இரண்டுமே இரு ஆண் குழுக்களிடையே நடைபெறும் ஒருவகை இழுவைப் போட்டியாகும். அன் கேலிய வில் குழுக்களை உடு பில (மேல் குழு – பாலங்காவின் குழு) என்றும் யட்டி பில (கீழ் குழு – பத்தினியின் குழு) என்றும்அழைக்கப்படும். இதில் பங்கு கொள்ளும் உரிமை தந்தை குடி வழியாக இருந்ததாக கூறப்படும். கொம்பு விளையாட்டில் கோவலனின் குழு வடசேரி என்றும் (வடக்குப் பகுதி) கண்ணகியின் குழு தென் சேரி என்றும் (தெற்குப் பகுதி) கொள்வர். கிழக்கு மாகாணத்தில் சொத்து உரிமையும், சாதி உரிமையும் தாய் குடிவழியாக இருப்பினும், விளையாட்டில் உரிமை தந்தைகுடி வழியாகத்தான் உள்ளது.(சுகுமார் 2009)
அன் கேலிய பற்றிய மிகப் பழமையான குறிப்புக்கள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரொபேர்ட் க்னாக்ஸ் அவர்களின், கிழக்கிந்திய தீவுகளில் உள்ள இலங்கைத் தீவின் சரித்திர தொடர்பு (1681) எனும் நூலிலேயே காணலாம். ஒபயசேகர (1984) அது வடக்கு,வடமேல் மாகாணங்கள் நீங்கலாக இலங்கை முழுவதும் நடாத்தப்பட்டு வந்ததென்பதாகச் சுருக்கிக் கூறுகிறார்.
சில பிரதேசங்களில் ,சாம்பர் இன மான்களின்(Rusa unicolor) கொம்புகளும் வேறு சில இடங்களில் மரக் கொழுக்கிகளும் பாவிக்கப்பட்டன. கொலை செய்யும் அளவுக்கு கூட, சமூகங்களிடையே அது ஏற்படுத்தியுள்ள முரண்பாடுகள் காரணமாக, இன்று இவ் விளையாட்டு விளையாடப்படாமை துரதிர்ஷ்டமே. (௦ஒபயசேகர 1984; சுகுமார் 2009). சிங்களவர்களும் தமிழர்களும் பல காலமாகக் கலப்புத் திருமணம் செய்து வரும் வரலாற்றினைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள பனாமா எனும் ஊரில் சிங்கள கிராமங்களில் இது பெரும்பாலும் இல்லாதொழிந்துள்ளது. (http://www.lankalibrary.com/rit/ankeli.htm ஐயும் பார்க்கவும்).