பெண் தெய்வத்தை எழுந்தருளச் செய்தல் : இலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு
பெண் தெய்வமானவள் காற்று,மேகம், விண்ணிலிருந்து இறங்கி,
இலங்கையின் வேதனைகளைத் தன் தெய்வீகக் கண்களினால் நோக்கினாள்1
பத்தினி-கண்ணகி வழிபாடானது இலங்கையில் இந்து-பௌத்த சமரசப் பண்பிற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது. இந்தப் பெண் தெய்வமானவள், சடங்குகள் வழிபாட்டு முறைகளால் இரு சமயத்தவரிடையேயும் பிரதேசங்களிடையேயும் வேறுபட்டிருப்பினும், தமிழ் இந்துக்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் அவள் போற்றப்பட்டு வருகிறாள். ஆயினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கையருக்கு அவள் ஒரு பொதுவான தெய்வம் என்பது தெரியாமலே உள்ளமை – இச்சிறிய தீவில் வாழும் இரு பிரதான இன சமூகங்களிடையே உள்ள அன்னியத்தன்மையின் அளவினை தரும் அறிகுறியாக உள்ளது. அவளை தமிழ் இந்துக்கள் கண்ணகி என்றும், சிங்கள பௌத்தர்கள் பத்தினி என்றும் அறிந்துள்ளனர்.
பத்தினி-கண்ணகியானவள் வசீகரமான, சிக்கலான பெண்மைக்கு ஒரு உதாரணம். அவள் நம்பிக்கைத் துரோகம் செய்த கோவலனின் கடமை தவறாத, கற்புடைய மனைவியாக இருக்கிறாள். மறுபுறம் தனக்கு ஏற்பட்ட அநீதியை நிவர்த்தி செய்ய சீற்றத்துடன் தனது வலது மார்பகத்தினை பறித்தெறிந்து ஒரு நகரையே தீக்கிரையாக்கி பழிதீர்க்கும் விதவையாக தெரிகிறாள்.
மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப்போரிலிருந்து இலங்கை மெதுவாக மீண்டு வரும் இச் சந்தர்ப்பத்திலே; வெற்றிகளிப்பில் சிங்களவரும் தோல்வியின் வேதனையில் தமிழரும் என வருந்தத்தக்க முறையில் பிளவுபட்ட இச் சமூககட்டமைப்பை ஒன்றிணைக்க,சிங்கள,தமிழ
பௌத்த, இந்துக்களின் பொதுவான வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் நினைவுகூர்வது காலத்திற்க்கு பொருத்தமானதே. தற்போது சனத்தொகையில் கூடிய விகிதமாக உள்ள, போரால் விதவையான அல்லது குடும்பத் தலைமைப் பொறுப்பு ஏற்கும் பல பெண்களுக்கு; வேதனையில் மூழ்கினும் மீண்டும் எழக்கூடிய பெண்ணாக, தண்டிக்கும் ஆனால் பலருக்கும் ஆதரவளிக்கும் பெண்ணாக, நம்பிக்கையின் சின்னமாக பத்தினி-கண்ணகியானவள் இருக்கிறாள். இந்த நம்பிக்கையே, சுனாமி கொண்டு செல்லும் வரை நினைக்க முடியாத அளவு இன்னல்களை அனுபவித்த மட்டக்களப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி பற்றிய மார்லின் கிரீஸில் எழுதிய சிறு கதையில் கசப்பான உண்மையாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. http://www.guernicamag.com/features/fire_inside/
1அடிக்குறிப்பு பஹன் பூஜாவ (offering of lights) எனும் கணநாத் ஒபயசெகரவின் நூலில் குறிபிடப்பட்டுள்ள ,பத்தினி தெய்வத்தின் வழிபாட்டு மரபு(சிக்காகோ: 1984)