IMG_3426

சிங்கள பௌத்த வழிபாட்டு தெய்வங்களில் (தேரவாதம்)  பத்தினிக்கே பெருமைக்குரிய பெண் என ஓரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவள் இலங்கையின் நான்கு காவல் தெய்வங்களில் ஒன்றாக கருதப்படுகிறாள்(ஹதர வரம் தெய்யோ). ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுவதும்; மிக புனிதமான, பிரதானமான பௌத்த வரலாற்று அணிவகுப்பு என கருதப்படுவதும்; கண்டி நகரைச் சுற்றி வருவதுமான  புனித தந்த ஊர்வலமான  அசல பெரஹரவில் பெருமைக்குரிய இடம் வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு பெண் தெய்வம் பத்தினியே. வளமும் நலமும் தந்து , பௌத்தத்தினைப்  பாதுகாத்து போதிசத்துவ நிலைக்கு (பெரும் புரணவ) அல்லது புத்தராக ஞானம் பெற்று உயரக்கூடியவள்  பத்தினித் தெய்வமே.

சில இந்து, பௌத்த மதங்கள்  கூறும் விடயங்கள்  புலமை சார்ந்த விடயங்களைப் போன்றே இருக்கின்றன. உதாரணமாக கஜபாகு மன்னன் கண்ணகியின் சிலம்புடன் இலங்கையை ஜம்புகோளபட்டினம் வழியாக  வந்தடைந்தான் என்றும், அவனது முதல் தரிப்பிடம் அங்கணம் கடவை என்றும், அங்கே அவன் அவளுக்கு கோயில் அமைத்தான் என்றும் (சுகுமார் 2009; கிருஷ்ணராஜா 2004; இராசநாயகம் 1926; சற்குணம் 1976; சிற்றம்பலம் 2004; சிவசுப்ரமணியம் 2003) புலமையாளர் விவாதித்துள்ளனர். இந்த அனுமானத்தை ஆதரிக்கும் விவாதமாகத் தீவிலே மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்கேயே அமைந்தும் , கஜபாகு மன்னனுடையது எனக் கருதப்படும் மிகப் பிரமாண்டமான அரச சிலை இக் கோயிலை பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டும் இருந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இராசநாயகம் அவர்கள்(1926) ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த சிலை யானை ஒன்றினால் உடைக்கப்பட்டது என்று கூறுமதேவேளை, பிற்காலத்தில் பி.இ. பீரிஸ் தெரனியாகல, கோயில் நிலத்தில், அதன் தலைப் பகுதியையும் கால் பகுதியையும் கண்டெடுத்து யாழ் நூதனசாலையில் அவற்றை வைப்பித்தார்.

பல பக்தர்களைப் போன்றே அநேக புலமையாளர்களும் ராஜவாளியவிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படும் இரு சம்பவங்களையும் ஒருங்கிணைத்து; மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் சேர நாட்டில் பத்தினி தெய்வத்தின் முதல் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றபோது, கஜபாகு மன்னன் சோழ பொக்கிஷங்களை சூறையாடி,கைதிகளையும்  கொண்டுசென்றான் என கூறுகின்றனர். ஆரியதாச ரணசிங்கவின்  சண்டே ஒப்சேர்வர்,11 ஜனவரி 2004 இல் வெளிவந்த கட்டுரையில் இந்த ஒருங்கிணைந்த  பிழைகள் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளன.

கஜபாகு காமினி மன்னன் (112-134) 20,000 சோழர்களுடனும்; இலங்கையை கைப்பற்றிய சோழ மன்னனான வங்கனசிகதிஸ்ஸ ஆட்சியில் (109-112)  சிறைப்பிடிக்கப்பட்டு, இந்தியா கொண்டுசெல்லப்பட்ட 20,000 சிங்களவர்களுடனும்   இலங்கை திரும்பி வந்த போது பத்தினி வழிபாட்டு மரபும், அத்தெய்வத்தின் சிலம்பும், அவளது சிலையும், விஷ்ணு, ஸ்கந்த, நாத தெய்வச் சிலைகளும்  தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. மன்னன் செங்குட்டுவன் கஜபாகு மன்னனுக்கு சம எண்ணிக்கையான சோழர்களையும், 20,000 சிங்களவர்களையும் அனுப்ப இணங்கினான்.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவில் பக்தர்களும், சமயச்சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் (இக் கோயிலை மிகப் புராதனமானது எனக் கருதுவோர்), கஜபாகு மன்னன், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்ட சந்தன மரத்தாலான மூன்றுகண்ணகி சிலைகளைக் கொண்டுவந்தான் எனவும், அவன் வந்திறங்கிய திருக்கோவில் துறை, நாகர் எனப்படும் பழங்குடி யினர் வாழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியாதலால் நாகமுனை என அன்று அது அழைக்கப்பட்டதெனவும் கூறுகின்றனர். அவன் உறக்கையில் (தம்பிலுவிலில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது) கண்ணகிக்கென கோயிலொன்றை அமைத்ததுடன் அக்கோயிலுக்கு அச்சிலைகளில் ஒன்றினை பரிசளித்தான் எனவும், காட்டிலே அவன் நடந்து சென்றபோது புதர்களிடையே இருந்து ‘கண்ணகி, கண்ணகி’ எனச் சத்தமிட்ட வண்ணம் புறா ஒன்று எழுந்து பறந்ததனாலேயே கஜபாகு இந்த இடத்தைத் தெரிவு செய்தான்எனவும் கூறப்படுகிறது. உறக்கைக் கோயிலும் அங்கிருந்த சிலையும் பின்னர் தம்பிலுவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.