கஜபாகு மன்னன் இலங்கை முழுவதும் கண்ணகி கோயில்களை அமைக்க வேண்டுமென ஆணையிட்டான் எனவும், அதனாலேயே கண்ணகி என்றும் அல்லது பத்தினி என்றும், (இராசநாயகம் 1926; சற்குணம் 1976) இவ் வழிபாட்டு முறை இத் தீவு முழுவதும் பரவி வளர்ச்சியடைந்தது எனவும் சில புலமையாளர்கள் விவாதிக்கின்றனர். இதனையே தம்பிலுவில் ஊர்சுற்றி காவியம் எனும் நூல் மட்டக்களப்பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்ணகி அம்மன் கோவில் உள்ளது என (சற்குணம் 1976; சிற்றம்பலம் 2004) குறிப்பிடுகிறது. தற்போது கிழக்கு மாகாணத்தில் 60 ற்கு மேற்பட்ட கண்ணகி அம்மன் கோயில்கள் உள்ளன. இவற்றில் முப்பது கோயில்களைப் பற்றி தம்பிலுவில் ஊர்சுற்றி காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆயினும் அதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள அங்கணம் கடவை, யாழ்ப்பாணக் குடா நாட்டிலேயே உள்ளது) மேலும் ஆறு கோயில்கள் , பத்திமேடு ஊர்சுற்றி காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பல கோயில்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் கட்டப்பட்டதென கருதுவர். (வீரகேசரி, ஜூன் 2, 2012)
ஆயினும், கணநாத் ஒபயசேகர, மேற் குறிப்பிட்ட பல கருத்துக்களையும் ஊகங்களையும் மறுத்துள்ளார். இங்கு அவர் எழுதிய கஜபாகுவும் கஜபாகு காலத்துக்குரிய நிகழ்வுகளும் : புராணக்கதைக்கும் சரித்திரத்திற்குமான தொடர்பின் விசாரணை(1978) எனும் கட்டுரையில் வந்த, விளக்கமான விவாதங்களை நாம் மீண்டும் புதுப்பிக்காமல் இரு சுவாரசியமான கருத்துக்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம்:
(1) பழமையான நீர் வெட்டும் விழா வழக்கு, பிற்காலத்தில் பத்தினி தெய்வத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், சிலம்பினை இலங்கைக்கு கஜபாகு மன்னன் கொண்டுவந்தான் என்பது ஒரு புராணிகக் கதையன்றி சரித்திர சம்பவம் எனக் கருத முடியாது. இது பிற்காலத்தில் மலைநாட்டில் தென் இந்திய குடியேற்றங்கள் பரவலாக காணப்படுகின்றமைக்கு காரணமாக சொல்லப்படும் ஒன்றாக கருதலாம். அவன் “மிகையான அளவு கைதிகளை இங்குள்ள நாடுகளில் பரவலாகக் குடியேற்றக் காரணமாக இருந்தான், உதாரணமாக அளுத்குருவா, சரசிய பட்டுவா, யட்டிநுவர, உடுநுவர, தும்பன, ஹெவஹெட, பன்சிவ பட்டுவா, எகோட டிஹா, மேகோடா டிஹா “(1900:48-9) என கஜபாகு மன்னன் பற்றி ராஜவாளியவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(2) 4 ஆம் நூற்றாண்டு வரலாற்று நூலான தீபவம்சத்திலும், 5ஆம் நூற்றாண்டு வரலாற்று நூலான மகாவம்சத்திலும் (இரண்டும் பாளி மொழியில் எழுதப்பட்டவை) கஜபாகு மன்னன் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவன் சேர நாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டான் என்பது பற்றிய குறிப்புக்கள் அவற்றில் இல்லை. அத்துடன் மகாவம்சத்தில் பத்தினி வழிபாட்டு மரபு இலங்கையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படவில்லை. இது 5 ஆம் நூற்றாண்டின் பின்னரான காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கருதக்கூடியதாக உள்ளது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட சரித்திர உரைகளான ராஜரட்னகார (16 ஆம் நூற்றாண்டு), ராஜவாளிய (17 ஆம் நூற்றாண்டு) என்பன இவ் வழிபாட்டு மரபினைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே பத்தினி வழிபாட்டு மரபு 10 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரான காலக்கட்டத்திலேயே கேரள குடியேற்றவாதிகளால் அறிமுகம் செய்யப்பட்டதென்பதை நம்பத்தக்கவொரு அனுமானமாகக் கொள்ளலாம்.
பத்தினி வழிபாட்டு மரபு (1984) எனப்படும் அவரது பெரு நூலிலே ஒபயசேகர இந்த வாதங்களுக்கு மேலும் வலுவூட்டுகின்றார். இதிலே ஆச்சரியம் என்னவென்றால், இப்படியான பலவகைப்பட்ட நீண்டகாலமாகக் காணப்படுகின்ற அனுமானத்திற்கு எதிர்ப்பாராத மறுப்புரை என்பது புலமையாளர்களிடையேயும், பக்தர்கள், சமயச்சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரிடையேயும் அறியப்படாத ஒன்றாக, புறந்தள்ளப்பட்ட , புரிந்துகொள்ளப்படாததாக இருந்துவந்துள்ளது.