Next
கொம்பு விளையாட்டு
அன் கேலிய சடங்கு முறையானது 15 நாட்களாக அழகிய, கரையோரக் கிராமமான பனாமாவில் நடைபெறுகிறது. இக் காலத்தில் முழுக் கிராமமுமே சைவ உணவு உண்பவர்களாக மாறுவதுடன், பல்வகை கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றனர். மீனவர் கடலுக்குச் செல்வதில்லை, பலசரக்கு கடை வைத்திருப்போர் தம் கடையில் கருவாட்டினைக் கூட கையிருப்பில் வைத்திருக்கவும் அனுமதிக்கப்படமாட்டார். அண்மைக் காலத்தில் இறப்புக்கள் நேர்ந்த குடும்பங்களும், மாதவிடாய் ஏற்பட்ட அல்லது சமீபத்தில் பிள்ளை பெற்ற பெண்களும் (அதாவது தூய்மை அற்றவர் எனக் கருதப்படுவோர்) கிராமத்தை விட்டு அகலவேண்டும் என எதிர்பர்க்கப்படுகின்றனர்.
தேவலே பிரகாரத்தில் காணப்படும் இரண்டு காவல் தெய்வங்கள்: பத்தினியின் கோயிலைக் காக்கும் பராகாச தெய்வத்திற்கும், பாலங்காவின் கோயிலைக் காக்கும் பராகாச தெய்வத்திற்கும் (அவர் அழுத் தேவியோஅல்லது புதிய தெய்வம் எனப்படுகிறார்) , கட்டுப்பாடுகளை மீறுவோரையும் அல்லது இந்த 15 நாள் காலத்தில் பிழையான நடைத்தைகளை மேற்கொள்வோரையும் தண்டிக்கவும் என தனித் தனிக் கோயில்கள் இப் புனித இடத்தில் அமைந்துள்ளன. மதுபானம் அருந்துதல் அனுமதிக்கப்பட்டு, அதிகளவில் பாவனையில் உள்ள போதிலும், போதைப் பொருள் பாவனை [narcotics] முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை சுவாரஸ்யமான விடயமே.
முதலாவது வாரமானது, பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் இளைஞர்களும், சிறுவர்களும் கொம்பு இழுத்தலை (கொழு அன்) செய்து பர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஐந்து நாட்களும் மிக முக்கியமானவை, ஏனெனில், அந் நாட்களில் வயது கூடிய, அனுபவம் மிகுந்த ஆண்கள் பங்குகொள்வர் (மகா அன் கேலிய). ஒவ்வொரு இரவும் 4-5 கொம்புகள் இழுக்கப்படும்; கொம்புகள் அளவிலும் சீரமைவிலும் ஒப்பிடப்படும். ஏனெனில் மிக நீளமான வளைந்த கொம்புகளை கொழுவிக்கொள்ளும் போது இரு குழுக்களிடையேயும் காரசாரமான வாய்த் தர்க்கமும், கைச் சண்டைகளும் ஏற்படலாம். இந்த 12 நாட்களும் நிகழ்வுகளில் பங்கு கொள்ளவோ, இரவு வரை தொடரும் ஆண்கள் மட்டுமே இடம்பெறும் சடங்கு முறைகளைப் பார்க்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. எனவே எங்களுக்கும் புகைப்படம் எடுக்க முடியவில்லை!
பெண்களுக்கு 13 ஆம் நாளன்று கோயில் மீண்டும் திறக்கப்பட; ஆண்கள் ‘கையிற்றை இறக்கும்’ அல்லது வலி பணவ சடங்கினை நடாத்துவர். இதனை பெண்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர். கொம்புகள் இழுக்கப்பட்டாலும், அதை முறிக்காமல் ஆண்கள் பார்த்துக்கொள்வர். ஏனெனில் இந்தச் சடங்கு முறையின் முக்கிய நோக்கம் முற்பட்ட 12 நாட்களில் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையையும், எதிர்த்து போட்டியிடும் எண்ணத்தையும் தகர்த்து; இரு குழுக்களிடையேயும் சம அந்தஸ்தினை நிலைநிறுத்துவதாகும். வெற்றி ஈட்டியோர், தோல்வி அடைந்தோர் என்போர் இல்லாமையினால்; முற்பட்ட 12 நாட்களில் இடம்பெற்ற களியாட்டம், ஆபாசம் – இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாசப் பாடல்கள் பாடுதலும்; வெற்றி பெற்ற குழுவினர் தமது பிறப்புக்குரிய உறுப்பினை தோல்வியடைந்த குழுவிற்குக் காட்டுதல் என்பனவும் நடைபெறுவதில்லை, எனவே இந்த மிக கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை பெண்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர்.
அழுத் தெவியோ, உடு பில குழுவினையும், யட்டி பில எனும் பத்தினியின் குழுவினையும் சேர்ந்த திறமைசாலிகள் முந்தய கிழமை தோண்டி எடுக்கப்பட்ட கருங்காலியின் /Andara shrub (Acacia catechu) வேரினைக் கொண்டு தனித் தனியே கொம்பு ஒன்றினைத் தயார் செய்கின்றனர்.
எதிர்க் குழுவின் பார்வையிலிருந்து தப்பும் வண்ணம் ஒவ்வொரு திறமைசாலியும் பாறை மறைவில் ஒதுங்குவர். முதலில் 5’-6’ நீளமான குறுக்குத் தண்டு அல்லது ரிகிள்ள பொல்ல ( ஹல்மில்ல/ சமுளை மரத்திலிருந்து – Berrya cordifolia) கொழுக்கிக்கும்(அங்க) அதன் நீண்ட கிளைக்கும் (தொடுவ) இடையில் அத்தி/மைல மரத்திலிருந்து பெறப்பட்ட (Bauhinia racemosa) கயிற்றினால் பிணைக்கப்படுகிறது. இந்த தடியானது கொழுக்கியின் இயக்கத்தினை மேம்படுத்துவதுடன் கயிறுகள் இழுபடும் போதுகொழுக்கியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
அங்க சிறிது மெலிதாக இருப்பின், அது மேலும் நான்கு மரக்கட்டைகளைக் கொண்டு கயிற்றினால் இணைத்து இறுக்கமாகக் கட்டப்படுகிறது. இது கொட்ட கவனவா/ தலையணைக்கு உணவூட்டல் என அழைக்கப்படுகிறது. (feeding the pillows).
இறுதியில் கிடைப்பது மிக நிறைவானது. Very phallic!
ஒவ்வொரு பிலாவும் ஒரு வட்டாண்டியைக் (சடங்கு முறைக்கென உதவியாளர்) கொண்டிருக்கும். ஒவ்வொரு கொம்பு இழுவையின் விளைவு அவரது நலிந்த தோள்களிலேயே தங்கி இருக்கும். அவர்கள் மிகக் கடுமையான புனிதம் தொடர்பான விதிகளைப் பின்பற்றவேண்டும். இதிலே உடல் இச்சை அடக்கம், சடங்கு ரீதியான தூய்மைப்படுத்தல், பி.ப.5 இன் பின்னர் உணவு உண்ணாமை, மதுபானம் அருந்தாமைபோன்றன அடங்கும். இவர்களே தமது பக்கம் தோல்வி உற்றால் வரும் கூச்சல்களையும், அவமரியாதையையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வட்டாண்டியின் குழு மீண்டும் மீண்டும் தோற்றால் அவனது தூய்மைகேட்டினாலேயே அது ஏற்பட்டதெனக் கருதி அவர் இடத்தில் வேறொருவர் நியமிக்கப்படுவார்.
தோற்ற குழுவின் வட்டாண்டி, பரிகாசங்களும், இழி பேச்சுகளும் கூடியதாக்குதலாக இருக்கும் போது, ஒவ்வொரு குழுவிற்கும் என்றுள்ள தும்மாலகேயில் (தூபவீடு) அடைக்கலம் புகுவர். தோற்றவர்களை அவமதித்தலும், நகைத்தலும் அதனைத் தொடர்ந்து வரும் வரத ரவனவ(செய்த பிழையைத் திருத்துதல்) எனும் சடங்கினால் சரிப்படுத்தப்படுகிறது. இங்கு வெற்றிபெற்ற குழுவின் மூன்று அங்கத்தினர் தும்மாலகேயில் இருக்கும் வட்டாண்டியை நெருங்கி கீழ் உள்ளது போன்ற பாடல் வரிகளைப் பாடுவார்கள்:
முதலும் கடைசியுமாக எல்லாப் பிழைகளையும் மறப்போம்
இனி ஒருபோதும் பிழைகளை இதயத்தில் கொள்ளமாட்டோம்(ஒபயசேகர 1984: 419).
கொம்புகள் தயாரானதும், அவை பத்தினி கோயிலுக்கும், அழுத் தெய்வக் கோயிலுக்கும் இடையில் உள்ள அன் ஹன்டிய/ கொம்புச் சந்திக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். முதலாவதாக உடு பில கொம்பு தேவலே பிரகாரத்தைச் சுற்றி (இரு கோயில்களையும் சுற்றி ), பத்தினியை விட பலங்காவின் நிலை தாழ்வு எனக் காட்டும் முகமாக, மும்முறை இடம்சுழியாக வலம் வரப்படும். (எனினும், அவர் ஆண்மகன் ஆதலால் அவருக்கு ஊர்வலத்தில் முதலிடமே!)
சிலைகள் எதுவுமே பவனி செல்வதில்லை. மாறாக, வெள்ளியில் வார்த்து, பழமையில் இழுக்கப்பட்ட கொம்பில் இணைக்கப்பட்ட இரு பரிமாண தெய்வ முகம் மரப்பேழையில் வைக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றது.
அழுத் தெவியோ கப்புறாளை (பூசகர்) தெய்வ உருவை தூக்கிக்கொண்டு செல்ல பக்கத்தில் வெள்ளைத் துணியை ஏந்தியபடி ஏகாலி (சலவைத் தொழிலாளர் சாதியினைச் சேர்ந்தவர்- அவர் தொழில் மாசு அகற்றும் பிரதான தொழில் என்பதால்) செல்வார். உடு பில குழு அங்கத்தவர் இழுக்கவேண்டிய கொம்பினைத் தூக்கிய வண்ணம் பின் தொடர்வார். அவர் அங்க வடவன்ன(கொம்பு தூக்குபவர்) என அழைக்கப்படுகிறார். அவருக்குப் பின்னால் ஏனைய உடு பில குழுவும் அழுத் தேவலேயின் பசனயாக்க நிலமேயும் (சமயச் சார்பற்ற பாதுகாவலர்) தொடர்வர்.
அதன் பின் யட்டி பிலவின் கொம்பு தேவலே பிரகாரத்தைச் சுற்றி (இரு கோயில்களையும் சுற்றி) மும்முறை வலம்சுழியாக வலம் வரும். இந்த பவனியும் உடு பில ஊர்வலம் சென்ற ஒழுங்கு வரிசையையே பின்பற்றி நடைபெறும். இதில் பங்கு பெறுவோர், தெய்வ உருவினையும் கொம்பினையும் எச்சில் அல்லது சுவாசத்தினால் மாசுபடுத்தா வண்ணம், வாய் கட்டிச் செல்வர்.
கொம்புச் சந்தியானது (அன்ஹந்திய) இரு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவது கொம்பு மரம் (அன் கஹ), காட்டுக் கொடிகளைக் (பெராஸ்) கயிறு போல் பிணைத்து வலுவூட்டப்பட்ட புளிய மரம். அன் கஹாவிற்கு கயிறுகளைப் பிணைக்கும் சடங்கு பெராஸ் வக்கிரீம(கயிறுகளைப் பொழிதல்) எனப்படும். இது நடைபெறும் போது, அழுத் தெவியோ கப்புறாளை, வெந்தயாமவை (சிறிய சலங்கைகள் கொண்ட கோல்) அடித்தபடியும், புனித மந்திரங்களை உச்சரித்தபடியும் அழுத் தேவியன் நட்டீம எனும் நாட்டியத்தினை ஆடத் தொடங்குவார். அதன் பிறகு அவருக்கு அழுத் தேவியோ உருஏறி (தேவருத வெனவா/சாமி ஏறி) ஆரூடம் கூறுவார்.
இரண்டாவது பிரிவு ஹென கண்ட (இடிமுழக்க மரம்), 13’ பாலை மரத் தண்டு (Manilkara hexandra) சடங்கு முறையில் பெராஸ் இனால் சுற்றப் படுவதுடன் அழுத் தேவியன் நட்டீம எனும் நாட்டியமும் ஆடப்படும். அத்துடன் அம்மரத்தினை மஞ்சள் நீராட்டி முடியில் வெள்ளைத் துணி கட்டப்படும். ஹென கண்டவானது ஆழமான குழிக்குள் நாட்டப்பட்டு மரக்குற்றிகளாலும் தடிகளாலும் வலுவூட்டப்படும். அது இரண்டு வடக் கயிறுகளால் (வரன்) பிணைக்கப்பட்டு இழுக்கப்படும் போது, குழிக்குள் முன்னும் பின்னுமாக ஆடும். ஹென கண்டவானது மகா அன் கேலியவின் போது மட்டுமே பாவிக்கப்படும்.
உடு பில குழுவின் (மேல் குழு) கொம்பானது அன் கஹ (கொம்பு மரம்) உடன் இணைக்கப்பட்டிருக்க யட்டி பில குழுவின் (கீழ் குழு) கொம்பானது கயிற்றினால் ஹென கந்த (இடிமுழக்க மரம்) உடன் இணைக்கப்படும். அன் வட்டாண்டியினால் (கொம்பு இழுத்தல் சடங்கு முறை உதவியாளர்) கொம்புகள் கொழுவப்படும் போது, முன் 12 நாட்களைவிடவும் அதிகமான வேடிக்கையான இடித்துத் தள்ளுதலும், சிறிதே ஆபாசப் பேச்சுக்களும் இடம்பெறும்.
பார்வையாளர்கள் கழுத்தை வளைத்து என்ன நடைபெறுகின்றது என்பதனை, பெருமளவான ஆண் உடல்களிடையே கூர்ந்து பார்ப்பர்.
குழுக்களின் மன நிறைவைத்தரும் வண்ணம் கொம்புகள் கொழுவப்பட்டதும்………
…. உடு பில, யட்டி பில குழுவினருக்கு (முழுக் கிராம மக்களுமே தந்தை குடிவழியாக ஒன்று அல்லது மற்றைய குழுவாக பிரிக்கப்படும்) அவர்களுக்குரிய வடக் கயிறுகளை இழுக்கும் படி ஆணை பிறப்பிக்கப்படும்.
இரு பில வினதும் (குழு) அன் வட்டாண்டிகள் வடக் கயிறுகள் இழுக்கப்படும் போது கொம்புகள் முறியாவண்ணம் பாதுகாக்கப் போராடுவர். ஒவ்வொரு குழுவிலும் (பில) ஒன்பது அன் வட்டாண்டிகள் இருப்பர். ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கடமைகள் உண்டு: ஒருவர் அங்கவினை சரியான இடத்தில் பிடித்திருக்கவும், மூவர் டோண்டுவ இனை பிடித்திருக்கவும், மூவர் ரிகில்ல பொல்லவினை நழுவி இயக்குவதற்கும், ஒருவர் உதவியாளராகவும் இருப்பர்.(இனி புடுவட)
யட்டி பிலவின் உடையாத, வெற்றிக் கொம்பு!
உடையாத, சம வெற்றியுடைய உடு பிலவின்கொம்பு!
அதன் பிறகு கோலாட்ட (லீ கெலி) நாட்டியக்காரர் தமது ஆட்டத்தினைத் தொடங்குவதற்கான நேரம். அவர்கள் பொல்லு கஹன அத்தோ என அழைக்கப்படுவர். மேளம் அடிப்பவருடனும், லீ கெலி விரின்டு கவி (கோலாட்ட நாட்டார் பாடல்கள்) பாடகருடனும் இணைந்து, அன் ஹன்தியாவில் தமது நாட்டிய நிகழ்வினைத் தொடங்குவதற்கு கோயில் பிரகாரத்தில் உள்ள (தேவலே) அனைத்து தெய்வங்களினதும் அனுமதி பெறுவார்.
அவர்கள் சுற்றிச்சுழன்று செல்கின்றனர்!
அதன் பின் நாட்டியக்காரர், பத்தினி உருவை கிராம இல்லங்களிற்குக் கொண்டு வரும் தெய்வ ஊர்வலம் (தேவ பெரஹர) வந்துகொண்டிருக்கின்றது என அறிவிக்க கோயில் நோக்கிச் (தேவலே) செல்வர். ஒபயசேகரவினால் (1984) மாற இப்பதீம (பாலங்காவின் கொலையும்,உயிர்த்தெழலும்) என்றும், நாம் உரையாடிய சில கிராமத்தவரால் “பாலங்காவின் இறப்பிற்கு பத்தினியின் ஒப்பாரி” எனவும் கூறப்படும் பாடல்களை அவர்கள் பாடுவர். நாட்டியக்காரர் அணியும் நீண்ட தென்னங் குருத்தோலையால் ஆன (கொக்கொல) அலங்காரம், வேதனையில் துடிக்கும் பத்தினியின் கலைந்த கூந்தலை பிரதிபலிக்கும். மாலை ஆக நாட்டியக்காரருக்கு வெறிஅதிகரிக்க,தொண்டையும் கரகரப்பாகும்.
முன்னைய தசாப்தங்களில் இரு தெய்வ உருக்களுமே இப் பயணத்தில் கொண்டு செல்லப்பட்டாலும், தற்போது தெய்வ ஊர்வலத்தில் (தேவ பெரஹர) பத்தினி தெய்வம் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறாள். இந்த மாற்றத்திற்கு குணசோம (1996)அவர்கள் கூறும் காரணம், அழுத் தேவியோ சக்தி வாய்ந்தவர் எனினும், அவர் சீக்கிரமே கோபப்படக்கூடியவர். எனவே ஒரு கிராமம் அவரை தற்செயலாக கோபமூட்டினால் அதன் விளைவுகள் பாரதூரமே. அதே சமயம் பத்தினியானவள் மிகவும் சகிப்புத் தன்மை உள்ளவள். அனைவரையும் கருணையுடன் பார்ப்பவளாதலால் அவளை கிராமத்தைச் சுற்றி கொண்டு சொல்லுதல் பாதுகாப்பான செயல்.
கோயில் பிரகாரத்திலும், வீதியிலும் செல்லும் அனைத்து ஊர்வலங்களுடனும், ‘தியைய்யோ’ என ஒரே மூச்சில் உற்சாகமாகப் பாடிக்கொண்டு இளஞ்சிறுவர் கூட்டம் செல்லும். இது ‘அரோகரா!’ ( ஓ தெய்வமே!) எனும் தமிழ் வடிவ வேண்டுதலுக்குச் சமமானது. ஒபயசேகர (1984), அவர்கள் 1960 களில் பாடிய சொற்கோர்வை ‘ஹாய் ஹாய் ஹோ’ என்றும், குணசோம (1996), அவர்கள் பாடிய சொற்கோர்வை ‘கியிய கிய கியய்யோ’ என்றும் கூறுவது ஒரு சுவையான விடயமே.
தெய்வ ஊர்வலமானது (தேவ பெரஹர) மிகக் கவனமாக ஒழுங்குபடுத்தப் பட்ட கிராமத்தின் நான்கு பிரிவுகளையும் – வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கினை உள்ளடக்கிய பாதையில் செல்வதுடன், கிராமத்தின் முக்கிய நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் மரியாதை கொடுக்கிறது. அது புராதனமானது , புதியது என உள்ள இரு பிள்ளையார் அல்லது கணேச கோயில், பௌத்த கோயில், தேவலேயினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகத்தினர், பிரதான வைத்திய அதிகாரி போன்ற முக்கியமான அரச அலுவலகர்கள் மட்டுமன்றி கிராம எல்லையில் 2011இல் இருந்த ஆனால் நாம் 2013 இல் மீண்டும் சென்ற போது கைவிடப்பட்ட இராணுவப் பாசறை என்பவற்றின் முன்னால் நின்று செல்லும்.
தெய்வத்தின் வருகைக்கு தயார்செய்யும் முகமாக, அவளை வரவேற்க எண்ணும் குடும்பங்கள் தமது இல்லங்களைத் துப்பரவும்,புனிதமும் ஆக்கி தேவியன்கே பண்டல எனப்படும், அழகாக அலங்கரிக்கப்பட்ட சிறிய மேடை களை அமைப்பர். ஊர்வலமானது இங்ஙனம் மேடைகள் அமைக்கப்பட்ட வீடுகள் முன்னால் மாத்திரமே நிறுத்தப்பட்டாலும்; இப்படியான தெரிதல், அவர்கள் அனைவரிடமும் அடுத்தநாள் விடியலின் முன் செல்லுதல் என்பதனை முடியாத காரியம் ஆக்குகிறது – 2011இல், இந்த பெரஹரஊர்வலம் மு.ப 10.30 இற்கே கோயில் திரும்பியது!
ஒவ்வொரு இல்லமும் பெரஹரஊர்வலத்தினை வெடிகள் வெடித்தும், புனித பொருட்களைக் கொண்டு செல்லும் பவனியின் போது வழக்கமாக விரிக்கப் படும் நிலப் பாவாடைக்குப் (பாதத் துணி) பதிலாக வாசலில் இருந்து மேடை வரை நீர் ஊற்றியும் வரவேற்பர். பத்தினி தேவலேயைச் சேர்ந்த கப்புறாளை பத்தினியின் உருவினை மேடையில் வைத்து பல்வேறு வணக்க முறைகளை செய்வார் – தெய்வத்தின் முன் கற்பூரம் ஏற்றுதல், மஞ்சள் நீர் தெளித்தல், ஊதுபத்திகளை சூழற்றுதல், வெற்றிலையும் பூக்களும் வைத்தல் (குடும்பத்தால் வழங்கப்பட்டது) என்பன.
நிலத்தில் லயத்துடன் குத்தப்படும் போது வெந்தயாம ஒலிக்க (சிறு சலங்கைகள் கொண்ட கோல்), பத்தினியைப் போற்றும் பாடல்கள் (மல் வாட) பாடப்படும்.
குடும்பத்தினர் பத்தினியை வணங்கி, மஞ்சள் நீர்கொண்ட மண் கலயத்தில் காணிக்கையாக நாணயங்களைப் போடுவார் (பண்டுறு). பத்தினி தேவலேயைச் சேர்ந்த கப்புறாளை, அவர்கள் நெற்றியில் சந்தனம் இட்டு, மஞ்சள் நீரினால் ஆசீர்வதிப்பார்.
பின்னர் கப்புறாளை, மேடையில் வைக்கப்பட்ட விளக்கின் திரியினை எடுத்து, அதன் மேல் சிறிது மஞ்சள் நீர் ஊற்றுவார். திரியின் நெருப்பு அணைந்ததும் அவர் பின்வருமாறு மந்திரங்கள் ஓதி அவர்களின் இல்லங்களை ஆசீர்வதிப்பார்:
வானிலிருந்து பூமாரி பொழிந்திடவே
வானிலிருந்து பூமாரி பொழிந்திடவே
இவ்வாறே மதுரையின் தீ அணைக்கப்பட்டதே
Showered flowery rain from the skies
Spouted water miraculously from the river
That’s how the fires of Madurai were quenched
இதுவே பெரகரவினைத் தொடர்ந்து இரவு முழுதும் செல்லும் கிராமத்து இளம் சிறுவர்களுக்கு மிகக் களிப்பான காலமாகும். அவர்கள் செல்லும் வழியில் உள்ள வீட்டினர் வழங்கும் அதிகளவு இனிப்புப் பானங்களை அருந்தியும், வாழைப்பழங்களையும், விளாம்பழ உருவில் உள்ள மோதகங்கள், கவுன், பயற்றங் கவுன், அதிரஹ போன்ற வித விதமான பலகாரங்களையும் உண்ணுவர்.
தேவலே பிரகாரத்துக்கு தெய்வமானவள் அடுத்த நாள் காலை கொண்டு வரப்பட்ட பின்னர், அவளது உரு தேவலேயின் உள்ளே கொண்டு செல்லப் படுவதில்லை. ஏனெனில் கிராமத்தைச் சுற்றி பவனி வரும்போது மாசு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும். எனவே உருவானது நீர் வெட்டும் நிகழ்விற்கு(திய கப்பீம) கடலுக்கு கொண்டுசெல்லப்படும் வரை ஹென கண்டவில் வைக்கப்படும்.
பாவிக்கப்பட்ட ரிகில்ல பொல்லவிலிருந்து ஒரு முக்காலி செய்யப்பட்டு அதன் மேல் மஞ்சள் நீர் நிரம்பிய மண் கலயம் வைக்கப்படும். இது அன் முக்காலிய என்றும் அழைக்கப்படும். முக்காலியவின் கீழ் மகா அன்கெலியா வில் வெற்றிவாகை சூடிய அனைத்து கொம்புகளும் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும். இவ் ஆண்டு, ஆகஸ்ட் 2013, யட்டி பில( பத்தினியின் குழு) அதிக வெற்றிகளைப் பெற்று கிராமத்திற்கும் நற் சகுனத்தைக் கொடுத்தது.
அழுத் தெவியோ கோவிலின் கப்புறாளை அழுத் தெவியோ தெய்வ உருவினை வெளியே கொணர்ந்து அழுத் தெவியோ நட்டீமா எனும் ஆடலை ஆடுவார். அவருக்கு சாமி ஏறியவுடன், அவர் கையில் அரிவாள்(மன்ன) கொடுக்கப்பட, அவர் அங்கஹவினை மும்முறை சுற்றி வலம் வந்து, அதன் பெரசினை வெட்டுவார். பின்னர் அவர் ஹென கண்ட நோக்கி விரைந்து ஓடி அதன் பெரசினையும் வெட்டுவார். அதன் பிறகு மயக்கமுற்று விழ, முகத்தில் மஞ்சள் நீர் தெளித்திட சாமி இறங்கும்.
தற்போது ஹென கண்ட இறக்கப்பட்டு குழியிலிருந்து வெளியே எடுக்கப்படும்.
அது வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு (பிருவட்ட) பிணம்போல் காட்சியளிக்கும்.
இது நடந்து கொண்டிருக்கும் போது பெளத்த, இந்து மதங்களைச் சேர்ந்த பல பக்தைகள், வாயினில் வேலினால் அலகு (அடையாளம் கசீம) குத்தியிருப்பார். இது முருகன் அல்லது ஸ்கந்தனது ஆயுதம். பனாமாஅருகிலும், கெபிலிட்டவி லும், கதிர்காமத்திலும் உள்ள அவரது கோயில்கள் மிகவும் போற்றப்படுபவை. வாயில் அலகு குத்துதல், பேச்சினை நிறுத்தி தெய்வத்தின் மீதே பூரண சிந்தையும் இருக்கச் செய்தலை குறித்துக் காட்டுவதை அமைகிறது.
ஆண் பக்தர்கள் தமது முதுகினை கொக்கியால் துளைத்து, அவை கயிறுகளால் தொடுக்கப்பட்டு இழுத்து வைத்திருக்கப்படும்.
அலகு குத்திய பல ஆண்களும், பெண்களும் பாரமான, வளைந்த, மரக்கட்டையினால் செய்யப்பட்டு மயில் இறகினால் அலங்கரிக்கப்பட்ட காவடியுடன் ஆடுவர். வளைந்ததடி என்பது தமிழில் காவடி என்று மாற்றம் பெற்ற சொல்லானது, ‘ ஒவ்வொரு அடியிலும் துன்புறுத்தல்’ என பொருள்படும். ஒவ்வொரு அலகு குத்திய நாட்டியக்காரருடன் அவரது ‘உதவியாளர்’ ஒருவர் முதுகில் குத்திய அலகினை இழுத்து கொழுக்கிகளின் அழுத்தத்தினை சரியாக சமப்படுத்துவதுடன், அவரது உடல் நிலையையும் கவனித்துக் கொள்வார்.
கொக்கி துளைக்காத இளம் ஆண்களும் பெண்களும், காவடியுடன் ஆடுவர்.
இரு தேவலேயின் தெய்வ உருக்களும், ஈட்டி,கோடரி போன்ற ஆயுதங் களும் ,ஆடை ஆபரணங்களும் வீதில் செல்லும் காவடி ஆட்டக்காரரைப் பின் தொடர, கிராம மக்கள் ஊர்வலத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி, குளிர் பானங்கள் வழங்கி,காணிக்கைகளும் (பண்டுறு)செலுத்துவர்.
பெரஹர ஊர்வலம் மண் மேடுகளைக் கடந்து, முழுக் கிராமமுமே அடி பின்பற்றித் தொடர கடற்கரை நோக்கிச் செல்லும்.
கடலிலே ஆயுதம் மற்றும் ஆபரணங்களை நீராட்டும் கிரியையும், நீர் வெட்டும் நிகழ்வும் (திய கபீம) செய்யும் முன்னர் இரு தெய்வங்களுக்கும் மடை (மட- சடங்கு முறையான படையல்) படைக்கப்படும்.
திய கபீம சடங்கு பற்றி, கஜபாகு மன்னன் சமுத்திரத்தை மரக்கோலால் வெட்டி இரண்டாகப் பிரித்தான் என எமது வரலாற்றுப் பகுதியிலே ராஜவாளிய கூறும் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்கோல் அல்லது முகுர வினால் சமுத்திரத்தை அடித்த போது இடம்பெயர்ந்த நீர் இரண்டு வட்டாண்டிகளால் இரு மண் கொள்கலங்களில் எடுக்கப்பட்டு, தத்தமது தேவலேக்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அடுத்த வருட அன் கேலிய நிகழ்வுவரை சேமித்து வைக்கப்படும். பல பக்தர்களும் இந் நீரில் சிறிதளவினை எடுக்க, அங்கு கொள்கலங்கள் கொண்டு வருவர்.
கிரியைப் பொருட்கள் நீராட்டப்பட்டு, நீர் வெட்டும் நிகழ்வும், அதனை சேகரித்தலும் முடிந்தவுடன், உடலைத் துளைத்தவர்கள், அவர்களது உறவினர் களுடன் தேவலே நிர்வாகிகளும் சேர்ந்து தேவலேயிற்கு ஓடும்போது …
கிராமத்து ஏனைய இளைஞர்கள் சுமுத்திரத்துட் பாய்வார்கள். இந்த நீர் விளையாட்டுக்கள் (திய கேலிய), அல்லது டெஸ்டொஸ்தேரோன் அதிகளவு சுரத்தலோ! வணிக அரச குமாரர்கள் காவேரி நதியில் உல்லாசமாய் இருந்த போது அல்லது கரிகாலனின் காவேரி திட்ட நிறைவில்(ஒபயசேகர1984: 393) பத்தினியை கண்டுபிடித்த சம்பவத்தினை நினைவுகூர்கிறது.
திய கபீம, திய கேலிய சடங்குகள், அதிகளவு பக்தர்களுக்கு 15 நாட்கள் நடைபெற்ற அன் கேலிய நிகழ்வின் நிறைவினை சுட்டிக்காட்டினாலும், மிக அதீத பக்தர்கள் தேவலேயிற்குச் சென்று அங்கு நடைபெறு இறுதி அன்னதானம் – பொங்கல் – இரு தேவலே க்களிலும் சமைக்கப்பட்டது, தேவலேக்கு அருகில் உள்ள நீர்ப்பாசனக் கால்வாயிற்கு ஹென கண்டவினை கொண்டு செல்லல் (அங்கு அது அடுத்த மகா அன் கேலிய நிகழ்வு வரை இருக்கும்) இரு தேவலேக்களின் கதவு சாத்தல் (அவை ஒரு வாரத்தின் பின்பே மீண்டும் திறக்கப்படும்) என்பவற்றில் கலந்து கொள்வர்.