இந்த மும்மொழி இணையத்தளமானது சிக்கலான வழிபாட்டு படிமுறைகள், எதிர்பார்ப்புக்கள், மீட்சி என்பவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புவதுடன் மட்டுமல்லாது பக்தி பற்றிய எண்ணங்கள், நம்பிக்கைகள் , கருத்துக்களுடன் சமரசப் பண்பினையும் பகிர்ந்து கலந்துரையாடி விவாதிப்பதற்குரிய ஒரு இடமாகவும் விளங்கும்.
பத்தினி-கண்ணகி வழிபாடு பற்றி ஆராய நாம் குறிப்பிடத்தக்க அளவு காலத்தை எடுத்திருப்பினும், எமது குறிக்கோள் நீண்ட புலமைத்துவம் மிக்க விடயங்களைத் தருவதை க்காட்டிலும் பக்தியினையும் சமரசப் பண்பினையும் காட்சிசார் வளமாக தருவதே — பக்தர்களின் இன்பதுன்பங்கள்; எதிர்பார்ப்புக்கள், கவலைகள் என்பனவும்; புனிதமான இடங்கள், சமயச் சடங்குப் பொருட்கள் என்பவற்றின் அழகும்; பக்தி ஆடல் அசைவுகளுடன் சுழலும் வண்ணங்கள்; சமயச் சடங்குகள், ஊர்வலங்கள் போன்றன பற்றியும் புகைப்படங்களே அதிகமாகத் தமது விடயங்களைப் பேசும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை.
எமது ஆராய்ச்சியானது கணநாத் ஒபெயசேகரவின் இலங்கையிலும் தென் இந்தியாவிலும் பத்தினி தெய்வத்தின் வழிபாட்டு மரபு (1984) என்னும் பத்தினி-கண்ணகி பற்றிய விசாலமானதும், விளக்கமானதுமான ஆய்வுகளிலிருந்து விரிவான தகவல்களைப் பெற்றுக்கொண்டது. ஆயினும் ஒபெயசேகரவின் 1950, 1960, 1970 ஆய்வுகாலத்திலிருந்து இலங்கையும் பத்தினி-கண்ணகியின் பக்தர்களும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக , ஒபெயசேகரவின் ஆய்வுகள் இலங்கையில் 1980 இலிருந்து 2009 வரை மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் தொடங்கும் முன்னரே முடிவுபெற்றது.
கலாநிதிபட்டப் படிப்பு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வந்துள்ள சமீபகாலத்து புலமைத்துவ உரைகள், சிறுநூல்கள், சிங்கள தமிழ் நாளேடுகளில் வந்துள்ள கட்டுரைகள் மூலம் நாம் முக்கியமான ஆழ்ந்த அறிவினைப் பெற்றுள்ளோம். இவற்றில் லிண்டி வார்ரெல் எழுதிய அண்டத் தொடுவானும் சமூகக் குரல்களும் (Cosmic Horizons & Social Voices (1990), குணசேகர குணசோம எழுதிய அன் கேலிய : பணம் பட்டுவ அசுரேன் (An Keliya: Panam Pattuva Asuren (1996) எனும் நூலும் பால சுகுமாரன் எழுதிய ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம் (2009) எனும் நூலும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. நாம் கட்டுரையை வாசிப்பதற்கும் அணுகத்தக்கதாக இருப்பதற்கும் உதவுவதாக புலமைசார் சொற்பிரயோகங்களைத் தவிர்த்து; அடிக்குறிப்புக்கள் மேற்கோள்களை குறைந்தளவே பாவித்துள்ளோம். வரலாற்றுப் பகுதியின் இறுதியில் இவ் இணையத்தளத்தில் பாவிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பட்டியலாக தந்துள்ளோம்.